விளையாட்டாய் சில கதைகள்: ஹாக்கியால் கிடைத்த வீடு

இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக உள்ள ராணி ராம்பாலின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 4). ஹரியாணாவில் உள்ள ஷாஹாபாத்தான் அவரது சொந்த ஊர். அந்த ஊரைச் சேர்ந்த பலர் ஹாக்கி போட்டிகளில் ஆடி, இந்தியன் ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். இதைப் பார்த்த ராணி ராம்பால், தானும் ஹாக்கி போட்டிகளில் ஆடி, ரயில்வேயில் வேலை பெற்று சொந்த வீடு கட்ட வேண்டும் என்று சிறு வயதில் விரும்பியுள்ளார். இதனால் சிறு வயதிலேயே உள்ளூரில் ஹாக்கி பயிற்சி மையம் நடத்திவரும் பல்தேவ் சிங் என்பவரிடம் ஹாக்கி பயிற்சியில் சேர்ந்துள்ளார் ராணி ராம்பால். இது ஊரிலுள்ள பலருக்கு பிடிக்கவில்லை. ராணியின் தந்தையிடம் “நம் கிராமத் தில் துப்பட்டா இல்லாமல் பெண்களை வெளியில் அனுப்புவதில்லை. நீயோ உன் மகளை ஹாக்கி ஆட அனுப்புவதாக கூறுகிறாய். அரைக்கால் சட்டையுடன் ஆடும் அந்த விளையாட்டு ஒழுக்கமான நம் ஊர் பெண்களுக்கு தேவைதானா?” என்று கேட்டுள்ளனர். ஆனால் ராணியின் தந்தை அதைக் கண்டுகொள்ளாமல் மகளை ஹாக்கி பயிற்சியில் சேர்த்துள்ளார். பயிற்சியில் சேர்ந்தாலும், ஹாக்கி விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களை வாங்க ராணியால் முடியவில்லை. இந்த சூழலில் பல்தேவ் சிங் அவருக்கு உதவினார். அவர் அளித்த பயிற்சியாலும், உதவிகளாலும் இன்று இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக இருக்கிறார் ராணி ராம்பால்.

இவரது முதல் கனவு, சொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்பது. போட்டிகளின்போது தனக்கு கிடைத்த பரிசுத் தொகைகளை சேர்த்து வைத்து இந்தக் கனவை அவர் நிறைவேற்றியுள்ளார். கூரை வீட்டில் இருந்த அவர், ஹாக்கியால் இன்று பங்களா போன்ற வீட்டில் வசிக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g4Hu6k
via

No comments:

Post a Comment